கீழ்ப்பாக்கத்தில் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம்: குற்றவாளிகளை பிடிக்க 9 தனிப்படைகள் அமைப்பு

நேற்று அதிகாலை 3.45 மணியளவில் 6 பேர் கொண்ட கும்பல் ரவுடி ஆதியை கொலை செய்துள்ளது.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தோழியை பார்க்க வந்த பிரபல ரவுடி ஆதி என்ற ஆதிகேசவனை 6 பேர் கொண்ட கும்பல் நேற்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கூடுதல் போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆதி என்ற ஆதிகேசவன் உள்பட சிலர் ஆஸ்பத்திரியின் பிரசவ வார்டுக்கு எதிரே அமர்ந்து மது குடித்துவிட்டு அங்கேயே தூங்கி உள்ளனர். அவர்களை போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற அறிவுறுத்தியும் வெளியேறவில்லை. ஆதிகேசவன் சரித்திர பதிவேடு குற்றவாளி. 2022-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 2 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு தற்போது தான் வெளியே வந்தார். ஆதி இருக்கும் இடத்தை அவருடன் இருந்த சிலரே கொலைகார கும்பலிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய 9 தனிப்படை அமைத்துள்ளோம்.
பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளது என முதல்கட்ட புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் ஆஸ்பத்திரியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் உள்பட போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். இரவு பணியில் 10 போலீசார் இருந்தனர். அவர்கள் துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் கூறினார்.






