

திருநெல்வேலி,
நெல்லை அருகே தாழையூத்து பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதோடு, போலீசாரையும் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு அரிசி ஆலை அருகே ஒரு நபர் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கிருந்த ராஜவல்லிபுரம், மேலத்தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் இசக்கிமுத்து(எ) ராஜாவை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரைக் கண்டதும், தன்னை கைது செய்ய வந்தால் போலீசாரை சுட்டுக் கொன்று விடுவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் A வகை சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜாவிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்து(எ) ராஜா கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.