தூத்துக்குடியில் மீனவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

தூத்துக்குடியில் மீனவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி மீது சிப்காட் காவல் நிலைய பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு உள்பட மொத்தம் 28 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கொலை-கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி தாளமுத்துநகர் அடுத்துள்ள ஆனந்த்நகரைச் சேர்ந்த முருகன் மகன் மாரிசெல்வம் (வயது 21). மீனவரான இவரும், சோட்டையன்தோப்பைச் சேர்ந்த சந்தனராஜ்(எ) சந்து(22), அண்ணாநகரைச் சேர்ந்த புவனேஷ்குமார்(22), நேரு காலனியைச் சேர்ந்த மரியஅந்தோணி ஜாய்சன் (22) மற்றும் ஹரிஹரசுதன்(22) ஆகிய 4 பேரும் நண்பர்கள் ஆவர்.

இவர்கள் 4 பேரும் நேரு காலனி பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, மாரிசெல்வத்திற்கும் சந்தனராஜுக்கும் இடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு பயங்கர தகராறாக மாறியுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சந்தனராஜ் உள்ளிட்ட 4 பேரும், தங்களது கையில் வைத்திருந்த அரிவாளால் மாரிசெல்வத்தை ஓட ஓட விரட்டி கொடூரமான முறையில் வெட்டினர்.

இதில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயமடைந்த மீனவர் மாரிசெல்வம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலைச் சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட நடவடிக்கையாக கொலையில் தொடர்புடைய சந்தனராஜ், மரியஅந்தோணி ஜாய்சன், ஹரிஹரசுதன் ஆகிய 3 பேரை போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரவுடி கைது:

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான புவனேஷ்குமார் மட்டும் போலீசாரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். தனிப்படை அமைத்து அவரைத் தேடி வந்த நிலையில், நேற்று அவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள புவனேஷ்குமார் மீது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு உள்பட மொத்தம் 28 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com