ரவுடி கொலை சம்பவம் எதிரொலி: கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் அனைவருக்கும் அடையாள அட்டை

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஆஸ்பத்திரியில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ப.செந்தில்குமார் அறிவுறுத்தினார். அதன்படி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொலை சம்பவம் அரங்கேறிய கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் நோயாளிகள், பார்வையாளருக்கு நீல நிற அடையாள அட்டை வழங்கப்படுகிறது. நோயாளிகள், பார்வையாளர்கள், நோயாளிகளுடன் வருபவர்கள் என அனைவருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஆஸ்பத்திரியின் டீன் டாக்டர் கவிதா கூறும்போது, “கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நடைமுறை ஏற்கெனவே உள்ளது. இருந்தாலும் தற்போது அதனை தீவிரமாக அமல்படுத்தியுள்ளோம். அந்த அட்டையில் நோயாளியின் பெயர், வயது, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
நோயாளியைச் சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு, நோயாளி சிகிச்சை பெறும் துறை சார்ந்த குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஒரு நோயாளிக்கு ஒரு பார்வையாளர் என்ற அடிப்படையில் அந்த அட்டை வழங்கப்படுகிறது” என்றார்.






