

தூத்துக்குடி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. விடுமுறை நாட்களிலும், சிறப்பான விசேஷ தினங்களிலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 100 ரூபாய் கட்டண வரிசையில் வரும் பக்தர்களின் வசதிக்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட காத்திருப்பு அறை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பக்தர்கள் அமரும் வகையில் அமையவுள்ள இந்த அறையில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
ஆவணி திருவிழாவிற்குள் இப்பணிகளை முடிக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ள நிலையில், கோவில் தக்கார் அருள்முருகன் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். சாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த புதிய வசதி தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.