பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், சீரங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. வீரப்பெருமாள் என்பவரின் மகன் செல்வன் மணிகண்டன் என்பவர் கிணற்றில் குளிக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

குளத்தூர் வட்டம், கிள்ளுக்கோட்டை சரகம், குடிகாட்டுவயல் பகுதியைச் சேர்ந்த திரு. மருதமுத்து என்பவரின் மகள் செல்வி வேம்பரசி என்பவர் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

குளத்தூர் வட்டம், தென்னங்குடி மேலப்புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியன் என்பவரின் மகன் திரு. நாகராஜன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், செப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ரமேஷ் என்பவரின் மகன் செல்வன் தருண் மற்றும் மகள் செல்வி தேவி ஆகிய இருவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், மத்திகோடு கிராமத்தைச் சேர்ந்த திரு.தங்கநாடார் என்பவரின் மகன் திரு. காமராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், இராஜதானி கிராமத்தைச் சேர்ந்த திரு. தவப்பாண்டி என்பவரின் மகள் செல்வி சுரேகா என்பவர் தண்ணீர் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், எ.புதூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. லட்சபூபதி என்பவரின் மகள்கள் செல்வி நந்தினி, செல்வி வினோதினி மற்றும் திருமதி இன்பவள்ளி என்பவரின் மகள் செல்வி புவனேஸ்வரி ஆகிய மூன்று நபர்களும் சித்தேரியில் கால்களைக் கழுவச் சென்ற போது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. கமலக்கண்ணன் என்பவரின் மகன் திரு. கௌதம் என்பவர் அணையில் குளிக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அய்யூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமையா என்பவரின் மகன் திரு. இளங்கோவன் என்பவர் மலைத்தேனீக்கள் கொட்டியதில், உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

மதுரை தெற்கு வட்டம், ஐராவதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சேட்கனி என்பவரின் மகன் செல்வன் ரியஸ் மற்றும் திரு. சையது இப்ராஹிம் என்பவரின் மகள் செல்வி பரிதாபீவி ஆகிய இருவரும் வைகையாற்றுப் பகுதியில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், இளையநாயக்கனேந்தல் கிராமத்தில் உள்ள பண்ணைக்குட்டையில், மூங்கில் ஊரணி கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜ்குமார் என்பவரின் மகன் செல்வன் தஷ்வந்த்பிரியன் மற்றும் திரு. பாரதி ராஜா என்பவரின் மகன் செல்வன் பிரஜின்(எ)ஜஸ்டின் ஆகிய இருவரும் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

காளையார்கோவில் வட்டம், பாப்பான்கண்மாய் கிராமத்திலுள்ள ஊரணியில் தேவகோட்டையைச் சேர்ந்த திரு. கணேசன் என்பவரின் மகள் செல்வி கன்ஷிகா மற்றும் மகன் செல்வன் பழனிக்குமார் ஆகிய இருவரும் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பழனி என்பவரின் மகன் திரு. ராஜேஷ் என்பவர் மீன் பிடிக்க சென்ற போது, படகு கவிழ்ந்து, வலைக்குள் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. தட்சணாமூர்த்தி என்பவரின் மகள் செல்வி காவியா என்பவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், அஞ்சுகுழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ராதா, அவரது மகள் செல்வி பவ்யஸ்ரீ மற்றும் திரு. தண்டபாணி என்பவரின் மகள் செல்வி சரஸ்வதி ஆகிய மூன்று நபர்களும் சின்ன செங்குளத்தில் துணி துவைக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், சின்னமநாயகன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி சிவகாமி என்பவரின் மகன் செல்வன் அருள்குமார் என்பவர் ஆனைமடுவு நீர்தேக்கத்தில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், கோடாங்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி திவ்யா என்பவரின் கணவர் திரு. ராஜா என்பவர் தேனீக்கள் கொட்டியதில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 25 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com