பெண், திருநங்கை டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ,1 லட்சம் மானியம் - அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

பெண் அல்லது திருநங்கை டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்கும் செலவில் ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.
பெண், திருநங்கை டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ,1 லட்சம் மானியம் - அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது எம் எல் ஏக்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து அந்த துறையின் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:-

தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இந்த அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்பு விபத்து நேரிட்டால் உதவித்தொகை கிடைப்பதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது விபத்து நேரிட்ட 48 மணி நேரத்திற்குள் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கரூரில் கட்டுமானத் தொழிலாளர்கள் 2 பேர் விபத்தில் இறக்க நேரிட்டபோது அதற்கான நிவாரண உதவித்தொகை ரூ,10 லட்சம், 2 நாட்களுக்குள் உரியவர்களிடம் வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஆட்சியில் இதுவரை 21 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ,1,646 கோடி அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணிநியமன ஆணைகளை தமிழக அரசு பெற்றுத்தந்துள்ளது" என்று அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண் அல்லது திருநங்கை டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்கும் செலவில் தலா ரூ,1 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பட்டாசு உற்பத்தியின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்,

ரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்து விருதுநகர் உள்ளிட்ட பட்டாசு தொழில் அதிகம் உள்ள 8 மாவட்டங்களில் 7,500 தொழிலாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும். தொழில்களில் வல்லுனர்களாக விளங்குபவர்களைக் கண்டறிந்து அவர்களின் கருத்துகளை வீடியோக்களில் பதிவு செய்து அதை கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஒளிபரப்பப்படும்.

மாணவர்களின் பொது அறிவை வளர்க்க, அரசு தொழில் பயிற்சி நிலைய விடுதிகளில் ஸ்மார்ட் டி.வி. மற்றும் இணையதளத்துடன் கூடிய நூலகங்கள் அமைக்கப்படும். அனைத்து தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய கால பயிற்சி வழங்கப்படும்.

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள, அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி எடுக்க வசதி செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com