

சென்னை,
டிரோன்' எனப்படும் ஆளில்லா வான்வழி சிறிய ரக விமான வடிவமைப்பை உருவாக்க ரூ.10 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் (எம்.ஐ.டி.) இணைந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆளில்லா வான்வழி வாகன கழகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் தொடக்க விழா மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சூரிய சக்தி மைய தொடக்க விழா ஆகியவை அண்ணா பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது.
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
விழாவுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளில்லா வான்வழி வாகன கழகம், சூரிய சக்தி மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் உள்ள அரசு துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த தற்போது தொடங்கப்பட்டுள்ள ஆளில்லா வான்வழி வாகன கழகம் உறுதுணையாக இருக்கும்.
சூரிய சக்தியை பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மையம் பல்கலைக்கழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.
பிரிக்க முடியாது
சூரியன் என்று சொன்னாலே அது சக்திதான். சூரியன் என்ற சொல்லையும், சக்தி என்ற சொல்லையும் யாராலும் பிரிக்க முடியாது. நான் அரசியல் பேசுவதாக யாரும் கருதவேண்டிய அவசியமில்லை. சூரிய சக்தியை உருவாக்கும் மையத்தைதான் நான் குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன்.
நாளுக்கு நாள் மின் தேவை அதிகமாகி கொண்டிருக்கிறது. அந்த தேவையை பூர்த்தி செய்ய சூரிய ஆற்றலை பயன்படுத்த வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை போல அனைத்து பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
ஆராய்ச்சி நிறுவனமாக மாற வேண்டும்
டிரோன்'களின் தேவை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. தமிழகத்தின் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு இது முன்மாதிரியாக அமைகிறது. அனைத்து பல்கலைக்கழகங்களும், வெறுமனே பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களாக இல்லாமல் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின்பு, அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த ஆளில்லா வான்வழி வாகன கண்காட்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்லூரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் தாமரைச்செல்வி, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.