

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி சென்னையில் 10 ஆயிரத்து 573 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் சோதனை நடத்தப்பட்டு 12.3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.10 லட்சத்து 28 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.