

சென்னை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள 18 கல்குவாரிகளை ஏலம் விடும் அறிவிப்பை கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் வழக்கு தொடர்ந்தார்.
அதில், கொரோனா ஊரடங்கு காலத்தில் இ-டெண்டர் முறையில் இந்த ஏலத்தை நடத்தாமல், குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக, விதிமுறைகளை மீறி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். இ-டெண்டர் முறையில் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எல்லா விதிகளையும் பின்பற்றி தான் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என்று அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வக்கீல் முருகேந்திரன் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், டெண்டர் அறிவிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ரூ.100 கோடி மதிப்புள்ள டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.