டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அமலாக்கத்துறையின் அறிக்கை குறித்து தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு குறித்து சட்டசபையில் பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக டாஸ்மாக் நிர்வாகம் மீதான முறைகேடு புகார் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார்,
அப்போது சபாநாயகர் அப்பாவு கூறுகையில், "அதிமுக உறுப்பினர்கள் 2 பேர் விவாதத்தில் பேச உள்ளபோது எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது. மானியக் கோரிக்கை மீது பங்கேற்க உள்ள அதிமுக உறுப்பினர்கள் முதலில் பேசட்டும். நினைத்த நேரத்தில் பேச அனுமதிக்க முடியாது. விதிகளிலும், மரபுகளிலும் இல்லாதவற்றை பேச ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.
மேலும் பயமா என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பியதற்கு, யாரும் பயந்தவர்கள் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.
எதிர்க்கட்சி தலைவருக்கு மற்றவர்களை விட அதிக நேரம் பேச உரிமை உண்டு. ஆனால் திடீரென பேச முடியாது என்று அவை முன்னவர் துரை முருகன் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. டாஸ்மாக்கில் நாளொன்றுக்கு ரூ.15 கோடி ஊழல் நடைபெறுகிறது. இதன்படி பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பதால் ஆண்டுக்கு ரூ.5,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. டாஸ்மாக்கில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை குறித்து பேச அரசு மறுக்கிறது. மக்கள் பிரச்சினையை பேசுவதற்கு தான் சட்டசபை, அங்கு பேச அனுமதி கிடையாது என்று உறுதியாக கூறுகின்றனர்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையின் அறிக்கை குறித்து தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும். பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி கொடுக்கவில்லை என்பது "ஜனநாயக படுகொலை" என்று கூறினார்.






