பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்-இல்லத்தரசிகள் கருத்து

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்-இல்லத்தரசிகள் கருத்து
Published on

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்

நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், வயல்வெளிகளில் வேளாண் பணிகளில் ஈடுபடும் தாய்மார்கள், மீனவ மகளிர்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்கு பணிபுரியும் பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.1,000 கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டது இல்லை. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. இதற்கு "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்" என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

ரூ.7 ஆயிரம் கோடி நிதி

இந்த புதிய திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து வெளியிட்டு உள்ளது.

அதில் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில்தான் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பல்வேறு பொருளாதார தகுதிகளும் வரையறுத்து வெளியிடப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக நடப்பு நிதி ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் இதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு ரேஷன் கடை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களில் எத்தனை பேர், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து பெண்கள் என்ன சொல்கிறார்கள்? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

காலம் தாழ்த்தகூடாது

அரியலூரில் உணவு விடுதியில் வேலை பார்க்கும் கீதா:- சட்டமன்றத்தேர்தலில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்கி வருகிறது. இந்தத் தொகை எங்களைப்போல் கூலி வேலை பார்க்கும் குடும்ப பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலம் கடத்தாமல் விரைவில் தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல்ல பலனை அளிக்கும்

தா.பழூரை சேர்ந்த ரேவதி:- நடுத்தட்டு மற்றும் அடித்தட்டு பொருளாதார நிலையை கொண்ட குடும்பங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை நிச்சயம் நல்ல பலனை அளிக்கும். மகளிரின் அத்தியாவசிய தேவைகளுக்கு இந்த தொகை பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் கொடுப்பதாக அரசு முடிவு எடுத்திருப்பது நல்ல விஷயமே. பொருளாதார நிலையில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு அதனை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் கணக்கெடுப்பில் எந்த குளறுபடியும் செய்துவிடாமல் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு தொகை கொடுக்கப்பட்டாலும் தவறான கணக்கெடுப்பு காரணமாக தகுதி உள்ளவர்களுக்கு அந்த தொகை கிடைக்காமல் இருந்துவிடக் கூடாது. அதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

வேதனை அளிக்கிறது

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுலோச்சனா:- தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் தற்போது ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது. டிராக்டர் வைத்து உழவு செய்து வரும் விவசாயி குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்காமல் தடுப்பது ஏமாற்றமளிக்கிறது. மேலும் மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கும் மருமகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இதுபோன்று வழங்குவது கூட்டுக் குடும்பத்தை அரசாங்கமே பிரித்து விடும் நிலைமைக்கு ஆளாக்குவது வேதனை அளிக்கிறது.

நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும்

விக்கிரமங்கலத்தை சேர்ந்த பானுப்பிரியா:- தேர்தல் வாக்குறுதியின் படி தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமை திட்டத்தை மனதார வரவேற்கிறேன். அதே சமயத்தில் இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் மற்றும் மாதம் 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் வழங்காவிட்டாலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும். மேலும் வயதானவர்கள், விதவைகள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களுக்கும் எவ்வித நிபந்தனை இன்றி உரிமைத்தொகை கொடுக்க வேண்டும்.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

அரியலூரை சேர்ந்த பாக்கியம்:- குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டமானது வரவேற்கத்தக்கது. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட உதவித்தொகை ஆகியவற்றை பெறுபவர்களுக்கு இத்திட்டம் இல்லை என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் முதியோருக்கும், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் விதவைகளுக்கும் கூடுதலாக ஆயிரம் ரூபாய் கிடைத்தால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் தங்களது குடும்ப நலத்திற்கும் நலமாக இருக்கும். எனவே இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கஷ்டப்படும் அனைவருக்கும் இத்தொகை கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

45 சதவீத குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை கிடைக்கும்

விவசாயிகளுக்கு நிதி வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் திட்டம்தான் நாட்டிலேயே அதிகம் பேருக்கு நிதி உதவி அளிக்கும் திட்டமாக உள்ளது. ஆனால் சதவீத அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான் முதன்மை திட்டமாக இருக்கப்போகிறது.

ஏனென்றால் நாட்டின் மொத்த மக்கள் தொகை 140 கோடி ஆகும். அதில் 54 சதவீதம் பேர் விவசாயிகள். அதாவது மொத்தம் 76 கோடி விவசாயிகள் உள்ளனர். அவர்களில் 8 கோடியே 90 லட்சம் பேருக்குத்தான் பிரதமரின் கிசான் திட்டத்தில் நிதி உதவி கிடைக்கிறது. அதாவது மொத்த விவசாயிகளில் 11 சதவீதம் பேருக்குத்தான் இந்த நிதி உதவி கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் சுமார் 4 கோடி பெண்கள் உள்ளனர்.

அதில் ரேஷன் கார்டு அடிப்படையில் மொத்தம் 2 கோடியே 24 லட்சம் குடும்ப தலைவிகள் உள்ளனர். அதில் 1 கோடி பேருக்கு அதாவது 45 சதவீதம் பேருக்கு உரிமைத்தொகை கிடைக்க போகிறது. எனவே பிரதமரின் கிசான் திட்டத்தை விட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் முதன்மையாக உருவாகப்போகிறது.

நிதி உதவி வழங்குவதில் தமிழகம் முதல் இடம்

இந்தியாவுக்கே பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. குறிப்பாக மாதம் தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நாட்டிலேயே முதன் முதலில் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர்தான். 1962-ம் ஆண்டு அவர் முதல்-அமைச்சராக இருந்த போதுதான் முதியோர் உதவித்தொகை திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தார்.

அப்போது ரூ.20 உதவித்தொகையாக முதியோர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்பின் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது ஆதரவற்ற விவசாய கூலிகள், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டமாக விரிவுப்படுத்தினார்.

அதன்பின் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவியை அதிகப்படுத்தினர். தற்போது இந்த திட்டத்தை நாடு முழுவதும் பல மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன. 2010-ம் ஆண்டு முதல் மத்திய அரசும் இந்த திட்டங்களுக்கு நிதி உதவி அளித்து வருகின்றன.

அதேபோல் பெண்களுக்கான திட்டங்களை கொண்டு வருவதிலும், அதனை செயல்படுத்துவதிலும் நாட்டிலேயே தமிழகம் எப்போதும் முதன்மையாக திகழ்கிறது. சொத்தில் சம பங்கு, தொட்டில் குழந்தை திட்டம், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி, கர்ப்பிணி உதவித்தொகை, மோட்டார் சைக்கிள் மானியம், பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி என சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் செயலுக்கு வந்ததும், அரசு மூலம் மாத உதவித்தொகை பெறுவதில் தமிழகம்தான் முதல் இடத்தில் இருக்கும். ஏனென்றால் தமிழகத்தில் ஏற்கனவே முதியோர், விதவை உள்பட பல்வேறு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சுமார் 32 லட்சம் பேரும், புதுமைப்பெண் திட்டத்தில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் பேரும் மாத உதவித்தொகை பெறுகின்றனர். பெண்கள் உரிமைத்தொகை மூலம் 1 கோடி பேர் மாதம் ரூ.1,000 பெற உள்ளனர். இதுதவிர பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 48 லட்சத்து 90 ஆயிரத்து 91 விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெறுகின்றனர். ஆக மொத்தம் சுமார் 1 கோடியே 83 லட்சம் தமிழர்கள் மாதந்தோறும் உதவித்தொகை பெறுவார்கள். இது மற்ற மாநிலங்களை விட மிக அதிக எண்ணிக்கையாகும்.

45 சதவீத குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை கிடைக்கும்

விவசாயிகளுக்கு நிதி வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் திட்டம்தான் நாட்டிலேயே அதிகம் பேருக்கு நிதி உதவி அளிக்கும் திட்டமாக உள்ளது. ஆனால் சதவீத அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான் முதன்மை திட்டமாக இருக்கப்போகிறது.

ஏனென்றால் நாட்டின் மொத்த மக்கள் தொகை 140 கோடி ஆகும். அதில் 54 சதவீதம் பேர் விவசாயிகள். அதாவது மொத்தம் 76 கோடி விவசாயிகள் உள்ளனர். அவர்களில் 8 கோடியே 90 லட்சம் பேருக்குத்தான் பிரதமரின் கிசான் திட்டத்தில் நிதி உதவி கிடைக்கிறது. அதாவது மொத்த விவசாயிகளில் 11 சதவீதம் பேருக்குத்தான் இந்த நிதி உதவி கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் சுமார் 4 கோடி பெண்கள் உள்ளனர்.

அதில் ரேஷன் கார்டு அடிப்படையில் மொத்தம் 2 கோடியே 24 லட்சம் குடும்ப தலைவிகள் உள்ளனர். அதில் 1 கோடி பேருக்கு அதாவது 45 சதவீதம் பேருக்கு உரிமைத்தொகை கிடைக்க போகிறது. எனவே பிரதமரின் கிசான் திட்டத்தை விட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் முதன்மையாக உருவாகப்போகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com