

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, சுகாதாரமான, பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட நகர்ப்புற வாழ்விட சூழலை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் நோக்கில், ஜூன் 2026 முதல் பூங்கா மேம்பாடு, சாலை வசதிகள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பணிகளின் விவரங்கள் பின்வருமாறு:-
போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்பாகவும் சீராகவும் பயணிப்பதை உறுதி செய்யும் வகையில், சாலைகளின் தரத்தை மேம்படுத்த, சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல் மற்றும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ரூ.366.23 கோடி மதிப்பீட்டில் 599.79 கி.மீ. நீளத்திலான 3765 சாலைப் பணிகளுக்கு முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் 6-வது மாநில நிதிக்குழுவின் நகர்ப்புற சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு சீரான மற்றும் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், குடிநீர் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மதுரை மாநகராட்சியில் ரூ.19.56 கோடி மதிப்பீட்டில் இரண்டு பணிகளும், கடலூர் மாநகராட்சியில் ரூ.36.41 கோடி மதிப்பீட்டில் ஒரு பணி, கம்பம் நகராட்சியில் ரூ.42.19 கோடி மதிப்பீட்டில் ஒரு பணி மற்றும் சிதம்பரம் நகராட்சியில் ரூ.20.54 கோடி மதிப்பீட்டில் ஒரு பணி என மொத்தம் ரூ.119.00 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இயக்கம் மற்றும் பராமரிப்பு பற்றாக்குறை மானிய நிதியின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாக குடிநீர் பற்றாகுறை ஏற்பட்ட நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு குடிநீர் பற்றாகுறையினை பூர்த்தி செய்ய ரூ.97.36 கோடி மதிப்பீட்டில் 457 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பசுமைப் பரப்பினை அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மேம்படுத்துவதுடன் பொதுமக்களுக்குத் தரமான பொழுதுபோக்கு மற்றும் நடைப்பயிற்சி வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், ரூ.14.87 கோடி மதிப்பீட்டில் 87 பூங்காக்களை மேம்படுத்தும் பணிகளுக்கும் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவ மாணவியருக்குத் தேவையான கூடுதல் வகுப்பறை வசதிகளை ஏற்படுத்தும் வகையில், ரூ.71.40 கோடி மதிப்பீட்டில் 106 பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கும், ஏற்கெனவே உள்ள பள்ளி வகுப்பறைகளின் தரம் மற்றும் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.13.83 கோடி மதிப்பீட்டில் 78 பள்ளி வகுப்பறைகளின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கும் 6வது மாநில நிதிக்குழுவின் பள்ளி மேம்பாட்டு மானியம் மற்றும் 16வது மத்திய நிதிக் குழு மானியத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் ஆரம்பகால பராமரிப்பு மற்றும் முன்பருவக் கல்விக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.29.68 கோடி மதிப்பீட்டில் 123 அங்கன்வாடி மையங்களுக்கான புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கும், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 9 அங்கன்வாடி மையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.0.38 கோடி மதிப்பீட்டிலான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கும் 6வது மாநில நிதிக்குழுவின் பள்ளி மேம்பாட்டு மானியம் மற்றும் 16வது மத்திய நிதிக் குழு மானியத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில், நகர்ப்புறப் பகுதிகளில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் நோக்கில், ரூ.13.14 கோடி மதிப்பீட்டில் 78 விளையாட்டு உட்கட்டமைப்புப் பணிகளையும், ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் 2 விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் 16வது மத்திய நிதிக் குழு மானியத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையை மேம்படுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில், குப்பைக் கிடங்குகளில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை உயிரியல் முறையில் அகற்றுதல், Bio-CNG ஆலைகள் அமைத்தல், நுண் உரக்கூடங்கள், வள மீட்பு மையங்கள் அமைத்தல், உயிரி எரிவாயு ஆலைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் STP-cum-FSTP அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தூய்மை இந்தியா இயக்கம் 2.0 மற்றும் பொது நிதியின் கீழ், ரூ.279.37 கோடி மதிப்பீட்டில் 48 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் கீழ் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, மொத்தம் ரூ.1019.61 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
வ. எண் பணிகளின் வகை திட்டம் பணிகளின் எண்ணிக்கை மதிப்பீட்டுத் தொகை (ரூ. கோடியில்)
1 சாலைப் பணிகள் CMIUDM, SFC-URDF 3765 366.23
2 குடிநீர் திட்டப் பணிகள் CMIUDM & O&M DGF 5 119.00
குடிநீர் பற்றாக்குறை நிவர்த்திப் பணிகள் (SDRF) SDRF 457 97.36
3 பூங்கா மேம்பாட்டுப் பணிகள் CMIUDM 87 14.87
4 பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் (புதிய கட்டடங்கள்) SFC-SIG 106 71.40
4(பள்ளி வகுப்பறைகள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு SFC-SIG 78 13.83
4 அங்கன்வாடி மையங்களுக்கான புதிய கட்டடங்கள் SFC-SIG 123 29.68
4(iv) அங்கன்வாடி மையங்கள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு SFC-SIG 9 0.38
5(i) விளையாட்டு உட்கட்டமைப்புப் பணிகள் 16th CFC 78 13.14
5(ii) விளையாட்டு அரங்கங்கள் அமைத்தல் CMIUDM 2 14.35
6 திடக்கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மைப் பணிகள் SBM 2.0 & GF 48 279.37
மொத்தம் 4,758 பணிகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.