

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில், சீர்மிகு சட்டப் பள்ளிக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் 3,641 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 3 தளங்களுடன் கூடிய 18 பொலிவுறு நவீன வகுப்பறைகளை (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்) கொண்ட கூடுதல் இளங்கலை வகுப்புக்கான கட்டிடத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அத்துடன் சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் சர்வதேச அளவிலான அன்றாட சட்டத் தீர்வுகளையும், சட்ட நுணுக்கங்களையும் உடனுக்குடன் அறிந்து தெரிந்து கொள்ளும் வகையில், 55 வகுப்பறைகளைக் கொண்ட இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பு கட்டிடத்தில் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இலவச வை-பை சேவையையும் மாணவர்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து அரசு சட்ட கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 பேருக்கு மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.