ஆலந்தூரில் ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு - 20 கடைகளுக்கு 'சீல்'

ஆலந்தூரில் ரூ.150 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், ஆக்கிரமித்து கட்டி இருந்த 20 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
ஆலந்தூரில் ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு - 20 கடைகளுக்கு 'சீல்'
Published on

சென்னையை அடுத்த ஆலந்தூர் கத்திப்பாரா ஜி.எஸ்.டி. சாலையில் அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் உள்ளது. 1967-ம் ஆண்டு இந்த இடத்தை தனியார் ஒருவருக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அந்த இடத்தில் டீ கடை, பரிசோதனை கூடம், வாகனங்கள் பழுது பார்க்கும் மையம் உள்பட 20 கடைகளை கட்டி அவர் வாடகைக்கு விட்டு இருந்தார்.

ஆனால் குத்தகை காலம் முடிந்தும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து அவர் கடைகளை வாடகைக்கு விட்டு இருந்தார். கடைகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ரூ.35 கோடியை அரசுக்கு செலுத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அதிகாலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த கடைகளுக்கு அதிரடியாக 'சீல்' வைத்தனர். பூட்டி கிடந்த கடைகளின் பூட்டுகளை அகற்றிவிட்டு வருவாய்த்துறை சார்பில் கொண்டு வந்த பூட்டுகளை போட்டு 'சீல்' வைத்தனர். திறந்து இருந்த டீ கடைகளில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைகளுக்கும் என 20 கடைகளுக்கும் 'சீல்' வைத்தனர்.

இதன் மூலம் ரூ.150 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டதாகவும், கோர்ட்டு உத்தரவுபடி குத்தகைதாரரிடம் ரூ.35 கோடி வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கணேஷ் நகர் பகுதியில் மணப்பாக்கம் குழலியம்மன் கோவிலுக்கு சொந்தமான 85 சென்ட் நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து மாடுகளை வளர்த்து வந்தார்.

கார்ட்டு உத்தரவின்படி இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் நித்யா, கோவில் செயல் அலுவலர் சக்தி ஆகியோர் மாங்காடு போலீசார் பாதுகாப்புடன் சென்று கோவில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினார்கள். அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட மாடுகளை வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.63 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com