பொருட்காட்சி அனுமதி அளிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்: தலைமைச் செயலகத்தில் கையும் களவுமாக அரசு அதிகாரி, உதவியாளர் கைது

பொருட்காட்சி நடத்த அனுமதி அளிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது, தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரி மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பொருட்காட்சி அனுமதி அளிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்: தலைமைச் செயலகத்தில் கையும் களவுமாக அரசு அதிகாரி, உதவியாளர் கைது
Published on

சென்னை,

மதுரை தண்டல்காரன்பட்டி பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பொருட்காட்சி நடத்துவதற்கு அனுமதி கேட்டு அந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.

ஆனால் அந்த விண்ணப்பத்தை, தமிழக அரசின் செய்தி, விளம்பரத் துறைக்கு தபால் மூலம் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அனுப்பவில்லை. அதற்கு பதிலாக, விண்ணப்பதாரரிடமே அவரது விண்ணப்பத்தை கொடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி, விளம்பரத்துறையிடம் நேரடியாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளும்படி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

லஞ்சம் கேட்டார்

எனவே விண்ணப்பதாரர் மாணிக்கவாசகம் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து, அங்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள செய்தி, விளம்பரத்துறை அலுவலகத்தில் பொருட்காட்சி நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை பெற்ற அந்த துறையின் மேல் பிரிவு கணக்கர் (பொருட்காட்சி பிரிவு) அன்பரசு, பொருட்காட்சிக்கு அனுமதி அளிக்க ரூ.15 ஆயிரத்தை மாணிக்கவாசகத்திடம் லஞ்சமாக கேட்டார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, அன்பரசை கையும், களவுமாக பிடிக்க தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு நேற்று மாலை வந்தனர்.

கையும் களவுமாக...

போலீசார் கொடுத்திருந்த ரகசிய மை தடவப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அன்பரசனிடம் மாணிக்கவாசகம் கொடுத்தார். ஆனால் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்கும்படி அலுவலக உதவியாளர் பாலாஜியை அன்பரசு கேட்டுக்கொண்டார். அதன் பேரில் பணத்தை பாலாஜி வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து பாலாஜியை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும், அன்பரசின் கைப்பையில் காணப்பட்ட 3 கவர்களில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.90 ஆயிரம் தொகையையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் அன்பரசையும், பாலாஜியையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழக அரசின் தலைமை இடமான தலைமைச் செயலகத்திலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக செயல்பட்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com