அதிக வட்டி தருவதாக ரூ.17 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது குவியும் புகார்கள்

தேனியில் அதிக வட்டி தருவதாக ரூ.17 கோடி மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது புகார்கள் குவிந்து வருகின்றன
அதிக வட்டி தருவதாக ரூ.17 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது குவியும் புகார்கள்
Published on

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 32). இவர் கோவையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தின் பல இடங்களில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறினார். அதன்படி தேனியில் செயல்பட்ட கிளையில் பலர் முதலீடு செய்தனர். ஆனால், அந்த கிளை திடீரென மூடப்பட்டது. பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற பணமும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கம்பம் மாலையம்மாள்புரத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி (40) கொடுத்த புகாரின் பேரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துச்சாமியை கடந்த 19-ந்தேதி கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் நிதி நிறுவன கிளை மேலாளரான வத்தலக்குண்டுவை சேர்ந்த ஆனந்த் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் சுமார் 800 பேரிடம் இந்த நிதி நிறுவனத்தின் பெயரில் சுமார் ரூ.17 கோடி முதலீடு தொகை வசூல் செய்து மோசடி செய்யப்பட்டதாக தெரியவந்தது. இந்நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த 2 நாட்களாக மாவட்ட போலீஸ் குற்றப்பிரிவில் புகார்கள் கொடுக்க குவிந்து வருகின்றனர். இதுவரை தேனி மாவட்ட குற்றப்பிரிவில் இந்த நிதி நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்ட 42 பேர் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில், தேனி மாவட்டத்தில் மட்டும் 67 பேரிடம் ரூ.4 கோடி வசூல் செய்து மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்பேரிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com