

சென்னை,
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 -ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல், அதாவது 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் வாகன சோதனைகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்படும் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தேர்தல் நடத்தை விதியின் கீழ் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ரூ.170 கோடி மதிப்பிலான பணம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் இதுவரை ரூ.651 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ரூ.170 கோடியும், கேரளத்தில் ரூ.58 கோடியும், மேற்கு வங்காளத்தில் ரூ.319 கோடியும், அசாம் மாநிலத்தில் ரூ.97 கோடியும், புதுச்சேரியில் ரூ.7 கோடியும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.