வீடு, மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ.1.92 கோடி மோசடி: கணவன், மனைவி உட்பட 4 பேர் கைது

இப்புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
வீடு, மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ.1.92 கோடி மோசடி: கணவன், மனைவி உட்பட 4 பேர் கைது
யாஸ்மீன், விவேக், தினேஷ் சவுத்ரி, தேஜராம்.
Published on: 

சென்னை,

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு மற்றும் மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாகக் கூறி, பெண் ஒருவரிடம் ரூ.1.92 கோடி பணம் மற்றும் 90 பவுன் நகைகளை மோசடி செய்த கணவன், மனைவி உட்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அடையாறு பெண் அளித்த புகார்

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த கோமளவள்ளி (வயது 50) என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்பு வளாகம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் குறைந்த விலைக்கு வீடு வாங்கித் தருவதாகவும், மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகவும் கூறி சிலர் தன்னை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல கோடி ரூபாய், நகைகள் பறிபோன விதம்

அவர்களின் பேச்சை நம்பி, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.1.92 கோடி ரொக்கப் பணம் மற்றும் 713 கிராம் (சுமார் 90 பவுன்) தங்க நகைகளை அவர்களிடம் கோமளவள்ளி கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி வீடோ அல்லது மருத்துவ சீட்டோ வாங்கித் தராமல், வாங்கிய பணம் மற்றும் நகைகளையும் திருப்பிக் கொடுக்காமல் அவர்கள் ஏமாற்றி வந்துள்ளனர்.

தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

இப்புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

கணவன், மனைவி உட்பட 4 பேர் கைது

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், செங்கல்பட்டைச் சேர்ந்த யாஸ்மீன் (வயது 32), அவரது கணவர் விவேக் (வயது 34) மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த தினேஷ் சவுத்ரி, தேஜராம் ஆகிய 4 பேரை போலீசார் நேற்று (புதன்கிழமை) கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நோக்கில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com