

சென்னை,
ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளம், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவால் இன்று (23.07.2026) திறந்து வைக்கப்பட்டது.
இந்த நீச்சல்குளம் பொதுப்பணித்துறையால் நிறுவப்பட்டு, கல்வித்துறையால் நிர்வகிக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. 50 மீட்டர் நீளமும், 25 மீட்டர் அகலமும், 4 - 12 அடி ஆழமும் கொண்ட பெரிய நீச்சல் குளமும், 25 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும், 2.5 - 3.5 அடி ஆழமும் கொண்ட பயிற்சி குளமும் (Warmup Pool) ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் உயர்தரத்துடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
நீச்சல் குளங்களின் பழுதடைந்த தரை மற்றும் சுவர் டைல்ஸ்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், புதிய குழாய்கள், பம்புகள், வடிகட்டும் (Filtration) அமைப்புகள், ஸ்டார்டிங் பிளாக்குகள், ஏணிகள், கிரேட்டிங், உள்ளிட்ட உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் நீச்சல் வீரர்கள் பாதுகாப்பாகவும், தரமான சூழலிலும் பயிற்சி பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 1,500 சதுர அடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் வீரர்களுக்கும், பொது மக்களுக்கும் பயிற்சி அளிக்க ஏதுவாக 4 பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.12.50 கோடி மதிப்பீட்டிலும், கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6.27 கோடி மதிப்பீட்டிலும் புதிய நீச்சல் குளங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிறுவிளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளம் ரூ.23 லட்சம் மதிப்பீட்டிலும், சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளம் ரூ.16.35 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் என தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.35.35 கோடி மதிப்பீட்டில் 4 நீச்சல் குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.