

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் ஆவின் பால் முகவர்களுக்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 1-ஆம் தேதி முதல் பால் முகவர்கள் தங்களுக்கான கமிஷன் தொகையை கழித்துக் கொண்டு மீதமுள்ள தொகையை செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய விற்பனைப் பிரிவு மென்பொருள் செயலி மூலம் பால் தேவையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால் முகவர்களுக்கான தேவைப்பட்டியல் இனி பாக்கெட் அடிப்படையில் அல்லாமல், பெட்டி அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாதாந்திர பால் அட்டை வைத்திருக்கும் நுகர்வோர் ஒவ்வொரு மாதமும் 11-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிக்குள் கைப்பேசி செயலி மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றும், தற்போது வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ஜூலை 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், ஜூலை 1-ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு ஆவின் பால் அதிகபட்ச சில்லறை விலை (MRP) அடிப்படையிலேயே விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.