சென்னை அண்ணாசாலையில் பயங்கரம்: அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சம் கொள்ளை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

சென்னை அண்ணாசாலை பகுதியில் அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சம் கொள்ளை அடித்துச்சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சென்னை அண்ணாசாலையில் பயங்கரம்: அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சம் கொள்ளை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
Published on

சென்னை அண்ணாசாலை பகுதியில் ரூ.20 லட்சம் கொள்ளை அடித்துச்சென்ற மர்மகும்பல் குறித்து தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரிவாள் வெட்டு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவபாலன்(வயது 27). இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். அடிக்கடி சென்னை வந்து அண்ணாசாலையில் உள்ள கம்பெனி ஒன்றில் மருத்துவ உபகரணங்களை வாங்கி செல்வார்.

வழக்கம் போல் நேற்று சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். பின்னர் இரவு 8.30 மணி அளவில் அவர் தனது நண்பரின் பைக்கில் ராயப்பேட்டைக்கு மற்றொரு நண்பரை பார்க்க சென்றார்.

அப்போது பை ஒன்றிற்குள் ரூ.20.22 லட்சம் ரொக்கப்பணத்தையும் எடுத்து சென்றார். அண்ணாசாலை பாரத ஸ்டேட் வங்கி அருகில் செல்லும் போது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் சிவபாலனை வழிமறித்தனர். பின் அவரது கையில் அரிவாளால் வெட்டினர். அதில் காயம் அடைந்த சிவபாலன் மோட்டார் சைக்கிளை விட்டு கீழே சாய்ந்தார்.

ரூ.20.22 லட்சம் பறிப்பு

உடனே அந்த 6 பேர் கும்பல்,சிவபாலன் பையில் வைத்திருந்த ரூ.20.22 லட்சம் ரொக்கப்பணத்தையும் கொள்ளை அடித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் அவர்கள் வந்த பைக்கில் தப்பி ஓடி விட்டனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சிவபாலன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கொள்ளைச்சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணம் யாருடையது?

சிவபாலன் பணம் கொண்டு செல்வதை தெரிந்து கொண்டுதான், அவரை பின்தொடர்ந்து சென்று இந்த கொள்ளைச்சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். மேலும் சிவபாலனும் தான் கொண்டு சென்ற பணம் பற்றி முறையாக பதில் சொல்லாமல், முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாக தெரிகிறது.

இதனால் அவர் கொண்டு சென்ற ரூ.20.22 லட்சம் பணம் யாருடையது என்றும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். தனிப்படை போலீசார் காஞ்சிபுரத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com