மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பின் மூலம் ரூ.200 கோடி முறைகேடு: விரிவான விசாரணை வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மற்ற மாநகராட்சிகளிலும் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பின் மூலம் ஏறக்குறைய ரூ.200 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறிய வரிக்குறைப்பு முறைகேட்டின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் லட்சக்கணக்கான தனியார் கட்டடங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

நீதிமன்றம் மூலமாகவோ, மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலமாகவோ குறைக்கப்படும் வரியை, தன்னிச்சையாக குறைத்திருப்பதோடு, வரிவிதிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் கடவுச் சொற்களும் (Password) முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அனைத்து வரிவிதிப்புகளும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் ஆதரவோடு நடைபெற்றிருக்கும் இந்த வரிக்குறைப்பு முறைகேடு தி.மு.க.வின் அடிப்படை குணமான விஞ்ஞான ஊழலை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே, மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பு முறைகேடு புகாரில் கைதாகியுள்ள நபர்களிடம் விரிவான விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com