

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026 எனும் தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:-
1. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும்.
2. ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.
3. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காகத் தடையற்ற ஜீரோ-எப்ஐஆர்' பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்ஸோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் 'நிர்பயா' நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.
4. பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, உற்பத்தி அலகுகளை அமைக்க ரூ.50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும். மேலும், அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்படும்.
5. முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் வகையில், தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம்.
6. திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வோம்.
7. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய 'தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை' உருவாக்கப்படும். கடல்வழி கடத்தலைத் தடுக்க 'கடலோர போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு', துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மேலும், மீண்டும் குற்றம் செய்வோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு NDPS சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
8. போதைப் பொருள் ஒழிப்பு தமிழ்நாட்டில் 10 நகரங்கள் Top 100 clean cities இடம்பெறும்
9. மூத்த குடிமக்களுக்கு வீட்டிற்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.
10. மீனவர்களுக்கு நியாயமான இழப்பீட்டை வழங்கும் வகையில், 61 நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ8,000-லிருந்து ரூ12,000-ஆகவும், மீன்பிடி குறைநிலை காலத்திற்கான உதவித்தொகையை ரூ6,000-லிருந்து ரூ8,000-ஆகவும் உயர்த்துவோம். மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூ2,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
11. தமிழக இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு ரூ10 லட்சம் வட்டியில்லா கடன், வேலைவாய்ப்பின்மை காரணமாக இ.எம்.ஐ (EMI) செலுத்த முடியாதவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் 1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி, மாவட்டந்தோறும் தமிழ் வழியிலும் பயிற்சி அளிக்கும் போட்டித் தேர்வு மையங்கள், திறன் கணக்கெடுப்பு மற்றும் தொழில்துறையுடன் இணைந்த பயிற்சிகள் வழங்கப்படும்.