

சென்னை,
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கிக்காக ஒப்பந்த அடிப்படையில் செயல்படக்கூடிய ‘கேஷ் செக்யூர் சிஸ்டம்’ நிறுவன ஊழியர்கள் பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் உள்ள இயந்திரங்களில் பணம் நிரப்பக்கூடிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு வேளச்சேரியில் உள்ள இந்த நிறுவன அலுவலகத்தில் இருந்து ரூ.4.69 கோடி பணத்துடன் 105 பணப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு, பணம் நிரப்பும் வாகனத்தில ஊழியர்கள் புறப்பட்டனர்.
அவர்கள் நகரில் உள்ள 14 ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்பிய நிலையில் 15-வது ஏ.டி.எம். மையமான பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை நிரப்புவதற்காக வந்தபோது, அந்த வாகனத்தில மூன்று பணப்பெட்டிகள் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து அவர்கள் வந்த வழியிலேயே திரும்பிச் சென்று தேடி பார்த்தபோது, முரசொலிமாறன் மேம்பாலத்தின் மீது 2 காலி பணப்பெட்டிகள் மட்டும் கிடந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு பணப்பெட்டி மாயமாகி உள்ளது. அந்த பணப்பெட்டியில் சுமார் 24 லட்சம் ரூபாய் வரை இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து உடனடியாக ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கொளத்தூர் துணை ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து முரசொலிமாறன் மேம்பாலத்திற்கு அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஐ.சி.எப். போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.