

சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிப் பகுதிகளில் சென்னை மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் மேம்பாலங்கள், சாலையோரங்களில் உள்ள சுவர்கள், அரசு மற்றும் மாநகராட்சி கட்டடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது மாநகராட்சி மூலமாக அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.05.2026 முதல் 09.06.2026 வரையிலான ஒரு மாத காலத்தில் அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்ட 4,491 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2,45,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் சுவர் விளம்பரங்கள் வரைதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.