கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்து வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்து வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக மக்கள் அவதியுற்று வருகின்றனர். தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் ஆரம்பத்தில் 9 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில், பின்னர் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் கருப்பு பூஞ்சைக்காக அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் 312 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 921 பேருக்கு அத்தகைய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் 95 சதவீதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும், சென்னையில் மட்டும் 277 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசு, இதுவரை 2,470 குப்பி ஆம்போடெரிசின்-பி மருந்துகளை அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்து வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.280.20 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், கொரோனா சிகிச்சை மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ரூ.41.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே பொது நிவாரண நிதியிலிருந்து கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்துவாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com