அமராவதி ஆற்றில் உயிரிழந்த 6 சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்

அமராவதி ஆற்றில் உயிரிழந்த 6 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அமராவதி ஆற்றில் உயிரிழந்த 6 சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்
Published on

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம், மாம்பறை பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் தாராபுரம் அமராவதி ஆற்றின் புதுப்பாலம் பகுதியில் வரும்போது, வாகனத்தை நிறுத்திவிட்டு அமராவதி ஆற்றில் இறங்கி குளித்ததில் 6 சிறுவர்கள் உயிரிழந்தனர் என்பதும், அதற்கு காரணம் தி.மு.க.வினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டதுதான் என்று அப்பகுதி மக்கள் தெரிவிப்பதும் என்னை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரூ.25 லட்சம் நிவாரண உதவி

மாணவர்களின் உயிரிழப்புக்கு திருட்டு மணல் அள்ளப்பட்டதும், அதனை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்ததும்தான் காரணம் என்பதாலும், உயிரிழந்தவர்களை சேர்ந்த அனைத்து குடும்பங்களும் மிக ஏழ்மை நிலையில் உள்ளதாலும், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைத்து குடும்பங்களும் இளம்பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு தவித்து கொண்டிருக்கின்றன.

எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனி கவனம் செலுத்தி, இளம்பிள்ளைகள் உயிரிழப்புகளுக்கு காரணமான திருட்டு மணல் அள்ளப்பட்டது குறித்து தீர விசாரித்து தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com