விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூரில் வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனம் மோதி பலியான தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் காவல் நிலைய தலைமைக் காவலர், பழனிவேல் (வயது 38) நேற்று (3-8-2023) மாலை உதவி ஆய்வாளர் தலைமையில், குருங்களூர் வெண்ணாற்றுப் பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் காயமுற்று சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இரவென்றும் பகலென்றும் பாராமல், தம் குடும்பத்தினரையும் மறந்து, நம் காவல் துறையினர் கடமையாற்றி வருகின்றனர். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் பழனிவேலின் அகால மரணம் காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு பேரிழப்பாகும்.

உயிரிழந்த தலைமைக் காவலர் பழனிவேலின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரியவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com