யானைக் கூட்டத்தை சீண்டியவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், அத்துமீறி நுழைந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர்.
யானைக் கூட்டத்தை தொந்தரவு செய்த 5 இளைஞர்களுக்கு வனத்துறையினர் ரூ. 25,000 அபராதம் விதித்தனர்.
யானைக் கூட்டம்
Published on

கோவை,

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, யானைக் கூட்டத்தை தொந்தரவு செய்த 5 இளைஞர்களுக்கு வனத்துறையினர் ரூ. 25,000 அபராதம் விதித்தனர்.

வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை நீர்நிலை பகுதிக்கு, வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வருவது வழக்கம். சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பதிவுகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள், பைக்குகளில் தடைசெய்யப்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர். அவர்கள் அங்கு வந்த யானைகளின் வழித்தடத்தில் காத்திருந்து, அவற்றை நெருங்கி வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க முயன்று தொந்தரவு செய்தனர்.

வனத்துறை நடவடிக்கை

அப்போது, அந்தப் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், அத்துமீறி நுழைந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர். வனச்சட்ட விதிகளின்படி, வனப்பகுதிக்குள் அத்துமீறிய குற்றத்திற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5,000 வீதம், மொத்தம் ரூ. 25,000 கூட்டு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு குறித்த கடுமையான எச்சரிக்கையும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வனப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

வனத்துறையின் கடுமையான எச்சரிக்கை

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் யானைகள் மிக உயர்ந்த பாதுகாப்பைப் பெற்ற விலங்கினமாகும். சமூக ஊடக லைக்ஸ்களுக்காக யானைகளின் அருகில் செல்வது, செல்பி எடுப்பது, கற்களை எறிந்து தொந்தரவு செய்வது சட்டப்படி குற்றமாகும்.

சமீபத்தில் பொள்ளாச்சி அருகே யானையை விரட்ட முயன்ற நபர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய செயல்கள் விலங்குகளை ஆக்ரோஷமடையச் செய்து மனித-விலங்கு மோதல்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் வனப்பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com