

சென்னை,
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடைபெற்று வருகின்றன. மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ரூ. 264 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக 65 சிறப்பு அதிரடிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக 12 சிறப்பு அதிரடிப்படைகளும், ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, நெல்லைக்கு தலா 2 கூடுதல் சிறப்பு அதிரடிப்படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு அதிரடிப்படைப்பிரிவுகளில் 65 இன்ஸ்பெக்டர்கள் ( தலா ஒரு சப் இன்ஸ்பெக்டர்), 260 சப் இன்ஸ்பெக்டர்கள் (ஒரு சிறப்பு அதிரடிப்படைப்பிரிவுக்கு தலா 4 சப் இன்ஸ்பெக்டர்கள்), 1,300 போலீசார் (ஒரு சிறப்பு அதிரடிப்படைப்பிரிவுக்கு தலா 20 போலீசார்) பணியாற்ற உள்ளனர்.
இந்த சிறப்பு அதிரடிப்படைப்பிரிவு போலீசாருக்கு போதைப்பொருள் தடுப்பு மற்றும் அது சார்ந்த பணிகள் தவிர வேறு பணிகள் ஒதுக்கப்படாது என அர்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.