நிலம் வாங்கி தருவதாக ரூ.2.70 கோடி மோசடி: புகார் கொடுத்த நடிகர் சூரி, கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜர்

நிலம் வாங்கி தருவதாக ரூ.2.70 கோடி மோசடி நடந்ததாக காமெடி நடிகர் சூரி கொடுத்த புகாரில் அவரே நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் விசாரணை நடத்தினார்.
நிலம் வாங்கி தருவதாக ரூ.2.70 கோடி மோசடி: புகார் கொடுத்த நடிகர் சூரி, கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜர்
Published on

சென்னை,

பிரபல காமெடி நடிகர் சூரி சென்னை அடையாறு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2.70 கோடி பண மோசடி செய்து விட்டதாக முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் மீது அந்த புகார் மனுவில் குற்றம் சாட்டி இருந்தார். முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா நடிகர் விஷ்ணுவிஷாலின் தந்தை ஆவார். ரமேஷ்கொடவாலா தன் மீதான புகாரை மறுத்தார்.

இந்த நிலையில் இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நடிகர் சூரியின் புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா நேரடியாக விசாரித்து வருகிறார்.

சூரி நேரில் ஆஜர்

புகார்தாரர் நடிகர் சூரியை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் நடிகர் சூரி நேற்று மாலை 6.30 மணி அளவில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து துணை கமிஷனர் மீனா முன்னிலையில் ஆஜர் ஆனார். நடிகர் சூரியிடம் சுமார் 1 மணி நேரம் துணை கமிஷனர் மீனா விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

இதேபோல புகார் கூறப்பட்ட, முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோரிடமும் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com