கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து தொழில் அதிபரிடம் ரூ.3½ கோடி மோசடி

கிரிப்டோ கரன்சியில் ரூ.3½ கோடி முதலீடு செய்ய வைத்து சென்னை தொழில் அதிபரிடம் மோசடி செய்ததாக கொல்கத்தா பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து தொழில் அதிபரிடம் ரூ.3½ கோடி மோசடி
Published on

சென்னை, 

சென்னை பூங்காநகர் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரிடம் அண்மையில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என சிலர் செல்போன் மூலமாக நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினர். அவர்களது பேச்சை நம்பி அவர்களுக்கு வங்கி பணபரிவர்த்தனை மூலம் ரூ.3 கோடியை அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்டவர்கள், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகச் சொல்லி மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் மோசடி கும்பல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து செயல்பட்டது தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் கொல்கத்தா சென்று, கோசிப்பூர் அருகே உள்ள பரா நகரைச் சேர்ந்த ரூபா ஜா (வயது 47), ஹூக்ளி ரிஷ்ரா பகுதியைச் சேர்ந்த ரமேஷ் சோனி (38), விஜய் சோனி (41) ஆகிய 3 பேரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான கொல்கத்தா பெண் ரூபா ஜா இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். அவர்தான் மூளையாக செயல்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com