

சென்னை,
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம் கிராமம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவரின் மகள் துர்காதேவி (17 வயது) என்பவர் நேற்று (02.03.2026) காலை சுமார் 9 மணியளவில் அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் மதுரை தெப்பக்குளம் சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்றுகொண்டிருந்தபோது மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அவர் பயணம் செய்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் துர்காதேவி பலத்த காயமடைந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த மாணவி துர்காதேவியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.