

சென்னை,
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர் - கோயம்புத்தூர் தேசிய நெஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகில், வேகமாக வந்த லாரி சாலைத் தடுப்பில் மோதிய நிலையில் அதைச் சரிசெய்து கொண்டிருந்த, வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலர் ப.ரவிச்சந்திரன் (36 வயது) மீது அவ்வழியே வேகமாக வந்த Xylo நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலர் ப.ரவிச்சந்திரனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ப.ரவிச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.