பட்டப்பகலில் காரை வழிமறித்து ரூ.30 லட்சம் பறிப்பு முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

ஊறுகாய் கம்பெனி ஊழியர்கள் சென்ற காரை நடுரோட்டில் வழிமறித்து கத்திமுனையில் ரூ.30 லட்சத்தை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் காரை வழிமறித்து ரூ.30 லட்சம் பறிப்பு முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
Published on

திண்டிவனம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊறுகாய் தயாரிப்பு கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனிக்கு சொந்தமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மேல்மலையனூர் பகுதிகளில் விவசாய பண்ணை உள்ளது. இங்குள்ள விவசாயிகளிடம் ஊறுகாய் தயாரிப்பதற்காக வெள்ளரி கொள்முதல் செய்வதோடு, அதற்கான பணத்தை விவசாய பண்ணையில் வைத்து ஊழியாகள் வினியோகம் செய்வது வழக்கம்.

முகமூடி கும்பல்

அந்த வகையில் திண்டிவனம் அடுத்த சாத்தமங்கலத்தில் உள்ள விவசாய பண்ணையில் வைத்து விவசாயிகளுக்கு பணம் வழங்குவதற்காக ஊறுகாய் கம்பெனி மேலாளர் ராஜா(வயது 31), காசாளர் சிபி சக்கரவர்த்தி(28) ஆகியோர் ரூ.30 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு காரில் புறப்பட்டனர். காரை டிரைவர் கிருஷ்ணன்(24) என்பவர் ஓட்டினார்.

அந்த கார், நேற்று காலை 8.30 மணியளவில் திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மூடியபடி 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென காரை வழிமறித்தது.

பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய வேகத்தில் காரின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

ரூ.30 லட்சம் பறிப்பு

இதில் காரில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்த நிலையில், சற்றும் எதிர்பாராதவிதமாக காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த காசாளர் சிபி சக்கரவர்த்தியின் கழுத்தில் முகமூடி அணிந்த நபர் ஒருவர், கத்தியை வைத்து மிரட்டினார். அந்த சமயத்தில் மற்ற 7 பேரும் காரில் இருந்த ரூ.30 லட்சத்தை பறித்துக் கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com