

சென்னை வியாசர்பாடி போலீசார் நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி ஏ.ஏ.ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 3 பேர் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு பேசியதை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் 2 பேர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதில், சந்தேகம் அடைந்த போலீசார் அவர் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தனர். அதில், கட்டுக்கட்டாக பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே வியாசர்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வானமாமலை முன்னிலையில் ஒப்படைத்தனர்.
அதில் பிடிபட்டவர் மாதவரம் அடுத்த சின்னமாத்தூர் 200 அடி சாலையைச் சேர்ந்த மைத்ரேயன் என்பவரின் மகன் தேவராஜ் (வயது 30) என்பதும், இவர் சென்னை பூக்கடையில் செல்போன் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் வைத்திருந்த ரூ.31 லட்ச பணம் குறித்து கேட்டபோது, செல்போன் விற்பனை செய்ததில் கிடைத்த பணம் என தெரிவித்தார். இது கணக்கில் வராத ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வானமாமலை, இதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரி பாலச்சந்தர் தலைமையில் கணக்கில் வராத 31 லட்ச ரூபாயையும், பிடிபட்ட தேவராஜையும் நேற்று போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.