வாரிசு சான்றிதழ் பெற பரிந்துரை செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் - பெண் வருவாய் ஆய்வாளர் கைது

வாரிசு சான்றிதழ் பெற பரிந்துரை செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
வாரிசு சான்றிதழ் பெற பரிந்துரை செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் - பெண் வருவாய் ஆய்வாளர் கைது
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அரசங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவரது தந்தை கருப்பசாமி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்த நிலையில் தனது தாய் மற்றும் தன்னுடைய பெயருடன் வாரிசு சான்றிதழ் கேட்டு மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் ஈஸ்வரி விண்ணப்பம் செய்திருந்தார்.

இதுதொடர்பாக வி.பெரியபட்டி பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆர்.ஹேமலதா நேரடி விசாரணை நடத்தி விட்டு சென்றார். ஆனாலும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக ஹேமலதாவிடம் ஈஸ்வரி கேட்டபோது தனக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் தந்தாலதான் வாரிசு சான்றிதழுக்கான பரிந்துரை கடிதத்தை தாசில்தாருக்கு அனுப்புவேன் என கூறி உள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரி இதுதொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஈஸ்வரியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று என்.பூலாம்பட்டியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து ரூ.4 ஆயிரம் லஞ்சப்பணத்தை ஈஸ்வரியிடம் இருந்து வருவாய் ஆய்வாளர் ஹேமலதா வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து ஹேமலதாவை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com