

சென்னை,
சென்னையைச் சேர்ந்தவர் அனுராக் ஜெயின். இவர், தனக்கு சொந்தமான நேஷனல் மெடிசின்ஸ் நிறுவனம் என்ற நிறுவனத்துக்கு 2007-ம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து முறைகேடான வழியில் ரூ.4.25 கோடி கடன் பெற்றுள்ளார்.
இந்த முறைகேட்டுக்கு ஸ்டான்டர்டு சாட்டர்டு வங்கிமேலாளர் பார்வதி ராமகிருஷ்ணன், யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் கண்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அனுராக் மற்றும் அவர் நடத்தி வந்த நிறுவனத்தின் இயக்குனர் மஞ்சுளா, வங்கி மேலாளர்கள் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி எஸ்.ஜவகர் முன்னிலையில் நடந்தது. சி.பி.ஐ. தரப்பில் மூத்த வக்கீல் எம்.வி.தினகர் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அனுராக் ஜெயின் உள்பட4 பேர் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அனுராக் ஜெயினுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.4 லட்சம் அபராதமும், கண்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம், மஞ்சுளாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், பார்வதி ராமகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், அனுராக் ஜெயின் நடத்தி வந்த நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.