ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

விசாரணை காலத்தில் அன்பில் மகேஷை மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
Published on: 

சென்னை,

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறையில் இருந்து அன்பில் மகேஷ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், நீதிமன்ற உத்தரவை மீறி முதல் வகுப்பில் சரியான உணவு வழங்கவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்பட்டது. அதனை மகேஸால் சாப்பிட முடியவில்லை. உடல் எடை குறைந்துவிட்டது. அவருக்கு சிறையில் வீட்டு உணவு வழங்க கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே, வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த அன்பில் மகேஷை 5 நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. போலீசாரின் கோரிக்கையையேற்று அன்பில் மகேஷை நாளை முதல் 2-ம் தேதி வரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி அனுமதி வழங்கினார்.

மேலும், விசாரணை காலத்தில் அன்பில் மகேஷை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது. உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். காவலில் உள்ள காலத்தில் நாள்தோறும் அவரது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

X