ரூ.400 கோடி ஊழல் வழக்கு: அன்பில் மகேஷின் நண்பர் முத்துக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கம்

முத்துக்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு நேற்று விசாரிக்கப்பட்டது.
ரூ.400 கோடி ஊழல் வழக்கு: அன்பில் மகேஷின் நண்பர் முத்துக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கம்
Published on: 

சென்னை,

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் முத்துக்குமாரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.400 கோடி ஊழல் வழக்கு

முந்தைய தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

பி.டி.அரசகுமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த அன்பில் மகேஷின் நண்பரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துக்குமார் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இந்த வழக்கில் கைதாகியுள்ள அன்பில் மகேஷ் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின் போது, முறைகேடாக வசூலித்த பணத்தை அன்பில் மகேஷின் வீட்டுக்கு முத்துக்குமாரின் கார் டிரைவர் சரவணன் எடுத்து சென்றதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும், தற்போது சரவணன் தலைமறைவாக இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோர்ட்டில் சரண்

இந்த நிலையில், சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் சரவணன் நேற்று சரண் அடைந்தார்.

விசாரணைக்கு பின்பு அவரை, வருகிற 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சரவணன், புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.

இதனிடையே முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு அதே கோர்ட்டில் நேற்று விசாரிக்கப்பட்டது. பின்னர் அந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தார்.

வங்கிக் கணக்குகள் முடக்கம்

இந்நிலையில் தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் முத்துக்குமாரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி முத்துக்குமாரின் 29 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.4.5 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசின் வங்கிக் கணக்குகளையும் முடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X