

சென்னை,
2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
38. கடந்த ஐந்து ஆண்டுகளில் 23,56,623 நபர்களுக்கு, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் அதன் சூழ்பகுதிகள் (Belt Area) மற்றும் மாநிலத்தின் இதர நகர்ப்புரப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, இதுவரை 77,800 இணைய வழி (On-line) வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், சென்னை மற்றும் அதன் சூழ் பகுதிகளில் 15,393 இணையவழி பட்டாக்களும், இதர மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 62,407 இணையவழி பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.
39. நவீன மின்னணு நில அளவைக் கருவிகளைப் பயன்படுத்தி 'நிகழ்நோ இயக்கவியல்' (Real Time Kinematics) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மறு நில அளவைப் பணி, கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
40. சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பாதுகாக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் போன்ற அனைத்து சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், 35.33 லட்சம் நபர்கள் பயனடைந்து வருகின்றனர். அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும், இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5,463 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
41. 'அறிவை விரிவு செய், அகண்டமாக்கு' என்று பாரதிதாசன் பாடியதிற்கிணங்க, கல்விச் செல்வத்தைக் குழந்தைகளுக்கு வழங்கி அறிவுச் சமூகத்தைப் படைத்திடும் நோக்கத்தில், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' 'இல்லம் தேடிக் கல்வி புதுமைப் பெண்', 'தமிழ்ப் புதல்வன்', 'கல்லூரிக் கனவு', 'எண்ணும் எழுத்தும் நான் முதல்வன்' போன்ற முத்தான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
42 அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் ஆகியவற்றைப் போதுமான அளவில் அமைத்து, கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ், 3,771 வகுப்பறைகள், 107 ஆய்வகங்கள், 4 ஆண்கள் விடுதிகள் மற்றும் 4 பெண்கள் விடுதிகள் ஆகியவை 673 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், 2,009 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
43. சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூகநீதி, பெண்ணுரிமை ஆகிய கருத்தாக்கங்களின் அடிப்படையிலான பயிலரங்குகள் நடத்தும் முயற்சி, கோடைக் கொண்டாட்டம்' எனும் நிகழ்வின் மூலம் முன்னெடுக்கப்பட்டது. ஐவகை நிலங்களின் பெயரில் குழுக்கள் அமைத்து, மாணவர்தம் தலைமைத்துவப் பண்பை முகிழ்த்தெழச் செய்ய, 'மகிழ் முற்றம்' எனும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
44. மாணவருக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் நலம் பேண, ஆசிரியர்களுக்கான முழு உடல் பரிசோதனைத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. பிற மாநிலங்களிலும், குறிப்பிட்ட சில உலக நாடுகளிலும் உள்ள கல்விச்சூழலை அறிந்துகொள்ள, மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கென சிறப்பு சுற்றுலாத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
45. சென்னையில் நடத்தப்படும் பன்னாட்டுப் புத்தகக் காட்சி தமிழை உலகமொழியாக்கும் மிகச் சிறந்த முயற்சியென அனைவராலும் வரவேற்கப்படுகிறது. அறிவார்ந்த புலவர்கள் கூடி விவாதிக்கச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம். தென்தமிழ்நாட்டின் அறிவாலயமாகத் திகழ்கிறது.
அறிவைப் பரவலாக்கும் முன்முயற்சியில், கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம் 902 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டந்தோறும் நூலகங்களை மேம்படுத்தி, அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படுகிறது இந்த அரசு.
46. 2021-22 ஆம் கல்வியாண்டில், முதற்கட்டமாக கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய மேல்நிலைப் பள்ளிகளாக தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட்டு, இன்று சென்னையில் உள்ள மாநில தகைசால் பள்ளியுடன், தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வாய்ப்புகளை உருவாக்குதல், அவற்றை அணுகத் தேவையான கல்வி மற்றும் கலை ஆளுமைத் திறன் பயிற்சி போன்றவை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
இத்திட்டத்தின் மூலம், கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 2,358 மாணவர்கள் 93 முன்னணி கல்வி நிறுவனங்களில், 50 விதமான துறைகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 41 மாணவர்கள் தற்போது இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IIT) பயின்று வருகின்றனர். மேலும், 17 மாணவர்கள் ஜப்பான், தைவான், மலேசியா ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் முழு கல்வி உதவித்தொகைகளுடன் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 48,534 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
47. கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பட்டப் படிப்புடன், தொழில்நுட்பப் பயிற்சியும் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி வரை இடைநில்லாமல் கற்பதற்குரிய சூழலை உருவாக்கிட, தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இக்குறிக்கோள்களை எட்டிட, கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்தம் தொழில்நுட்பத் திறன் மேம்பாடு, கல்வி உதவித்தொகைத்
திட்டம் என பல்வேறு முன்னெடுப்புகளை நமது அரசு மேற்கொண்டு வருகிறது.
48. கல்லூரி மாணவர்கள், தம் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக, 2,172 கோடி ரூபாய் செலவில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்டு, இதுவரை 6,75,888 பயன்பெற்றுள்ளனர். அண்ணா மாணவர்கள் பல்கலைக்கழகத்தை ஆசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்காக 1,380 கோடி ரூபாய் செலவிலான முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
49. கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, 'பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 909 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரைவாக மாறிவரும் வகையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ளும் 11 அரசுப் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, அதி நவீன உற்பத்தித் திறன் முதலான 8 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நம் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
50. உயர்கல்வியில் சமூகநீதியைப் பேணும் பொருட்டு, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள், தொழிற்கல்வி பயில, 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 54,301 மாணவர்களின் கல்வி மற்றும் உணவுக் கட்டணங்களை அரசே ஏற்று, இதுவரை 1,512 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10,563 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, 18,760 மாணவர்கள் கூடுதலாகப் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு உயர்கல்வியில் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகள் காரணமாக, நாட்டிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தேசிய சராசரியைவிட ஏறத்தாழ இரு மடங்காக 47 சதவீதம் பெற்று தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
51. மகளிர் கல்வியைப் போற்றிப் பாதுகாத்திட அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தைப் போன்று, ஆடவரும் உயர்கல்வி பெற்றிட முன்னெடுக்கப்பட்டதே தமிழ்ப் புதல்வன் திட்டம். ஆடவருக்கு உயர்கல்விக்காக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் இத்திட்டத்தில், இதுவரை 5,40,511 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
52. மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நிதி நல்கை 767 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் செயல்படும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் உரிய முன்னேற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில் 175 கோடி ரூபாய் கொண்ட செயல்திறன் ஊக்க நிதியமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 8,505 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
53. சிறார்கள், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுப்பாலினத்தார் என அனைத்துப் பிரிவினரும் நலம் காண விழைந்திடும் முனைப்பில் முத்திரைத் திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்துவதில் முன்னோடி அரசாக இவ்வரசு திகழ்கிறது.
54. பள்ளிக் கல்வி முடித்த மாணவர்கள், அவர்தம் விருப்பத்துக்கேற்ற கல்லூரிக் கல்வியைத் தேர்ந்தெடுப்பதில் வழிகாட்ட, 'கல்லூரிக் கனவு எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தில், 2 இலட்சத்து 68,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
55. தாய்த் தமிழ்நாட்டில் கல்வி கற்று, தரணியை ஆளும் தகுதியைத் தமிழ் மாணவர் பெற்றிட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமாம். 'நான் முதல்வன்' திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை கல்லூரி மாணவர்களுக்கு 48,65,050 திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இங்கிலாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் சர்வதேச பயிற்சிகளில் பங்குபெற்றுள்ளனர். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் திறன் பயிற்சி பெற்று வேலைவாய்ப்புகளுக்கு இளைஞர்களைத் தயார்படுத்திடும் 'வெற்றி நிச்சயம் திட்டம்' மூலம் 16 ஆயிரத்து 815 இளைஞர்கள் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர்: 70 ஆயிரத்து 500 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
56. ஒன்றிய குடிமைப்பணித் தேர்வில், தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருமளவில் வெல்வதற்காக, உதவித் தொகை. ஊக்கத் தொகை ஆகியவை வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறார்கள். 2025 ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 59 நபர்களில் 52 நபர்கள், நான் முதல்வன் திட்டப் பயனாளிகள் என்பது அரசின் செயற்பாட்டுக்குக் கிடைத்த நற்சான்று.
இவ்வாறு அவர் கூறினார்.