ரூ.5 கோடி மோசடி: சுற்றுலா வளர்ச்சிக் கழக கணக்காளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ரூ.5 கோடி மோசடி: சுற்றுலா வளர்ச்சிக் கழக கணக்காளரின் ஜாமீன் மனு தள்ளுபடி சென்னை கோர்ட்டு உத்தரவு.
ரூ.5 கோடி மோசடி: சுற்றுலா வளர்ச்சிக் கழக கணக்காளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அரிகரன் (வயது 52). தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார்.

இவர், இறந்துபோன தலைமை கணக்கு மேலாளரின் கையெழுத்தை போட்டு கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்ததாக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முதன்மை நிதி அலுவலர் கணேஷ் கார்த்திகேயன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் செய்தார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த அக்டோபர் 9-ந் தேதி அரிகரனை கைது செய்தனர்.

இந்தநிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநகர குற்றவியல் அரசு வக்கீல் தேவராஜன், 'மனுதாரர் இறந்த தலைமை கணக்கு மேலாளரின் கையெழுத்தை போட்டு ரூ.5 கோடியே 69 லட்சம் மோசடி செய்துள்ளார். பல்வேறு தேதிகளில் தனது வங்கிக் கணக்கில் இருந்து வேறொருவர் கணக்குக்கு பணத்தை மாற்றியுள்ளார். விசாரணை முழுமையாக முடிந்த பின்புதான் எவ்வளவு தொகை மோசடி செய்துள்ளார் என்பது தெரியவரும். எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது' என்றார்.

மனுதாரருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் ஹபீப் ரகுமான், 'இடைக்கால தணிக்கை அறிக்கையின்படி ரூ.9 கோடி மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. முறைகேடு செய்துள்ள தொகை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார். விசாரணை முடிவில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com