

சென்னை,
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30-ம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன்படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை அருகே உள்ள மதுரவாயலில் இன்று தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை நடத்தப்பட்ட போது தனியார் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் வட்டாட்சியரால் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி ரூபாயும் டாஸ்மாக்கில் வசூலிக்கப்பட்ட பணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் வட்டாட்சியர் டாஸ்மாக் ஊழியர்களிடம் உரிய ஆவணங்களை சமர்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.