கோவில்களில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணம் வசூல்; தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்

பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் கட்டுப்பாடுகள் வேண்டாம்.
தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

கோவில்களில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணம் வசூல் செய்வதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இறைவனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக, அதனை வைப்பதற்கே ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது.

செல்போன் வைக்க தனியாக வரிசை

ஏற்கனவே இறைவனை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது குடும்பத்தோடு வரும் பக்தர்கள், தங்களது செல்போனை வைப்பதற்காகவும் தனியாக வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்கது.

அரசின் கடமை

கோவிலுக்கு செல்வதே ஒரு சவாலான அனுபவமாக மாறிவிடக் கூடாது. பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனநிம்மதியுடனும் இறைவனை தரிசிக்க வழிவகை செய்வதே அரசின் கடமையாகும். இன்று இந்த தவெக அரசு கோவில்களிலும் பக்தர்களிடமும் விதித்து வரும் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள், இந்து மதத்தையும் பக்தர்களின் உணர்வுகளையும் பாதிக்கும் நடவடிக்கைகள் ஆகவும் அவர்கள் மீது தொடுக்கப்படும் மறைமுக மன தாக்குதல்களாகுமே பார்க்கப்படுகிறது

பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று, இறைவனை மனநிறைவுடன் தரிசித்து, நமது பாரம்பரியக் கலைச்சிற்பங்களை ரசித்து, கோவில் பிரசாதத்தைப் பெற்று, இறைவனின் ஆசீர்வாதத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும். கோவில் என்பது பக்தர்களுக்கு நிம்மதியும் ஆன்மிக மகிழ்ச்சியும் தரும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகளும் சிரமங்களும் நிறைந்த இடமாக மாறிவிடக் கூடாது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com