கோயில்களில் மொபைல் போன்களை பாதுகாக்கவே ரூ.5 கட்டணம் வசூல் - அமைச்சர் ரமேஷ் விளக்கம்

பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க கூடுதல் மொபைல் பாதுகாப்பு கவுன்ட்டர்கள் தொடங்கப்படும் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
பாதுகாக்கவே ரூ.5 கட்டணம் வசூல் - அமைச்சர் ரமேஷ் விளக்கம்
அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Published on

சென்னை,

மொபைல் போன்களை பாதுகாக்கவே ரூ.5 கட்டணம் வசூல். பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க கூடுதல் மொபைல் பாதுகாப்பு கவுன்ட்டர்கள். கூடுதல் கவுன்ட்டர்களை அமைப்பது குறித்து கோவில் நிர்வாகங்கள் முடிவெடுக்கும் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில், ஏற்கனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனைத் தரிசனம் செய்வதற்காகவும், இன்று (செப்.1) முதல் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களில் செல்போன்களுக்கு தடை நடைமுறையிலிருந்து வருகிறது. திருக்கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் அமைதியான வழிபாட்டுச் சூழலைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.

சிலர் திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளை புகைப்படம் எடுப்பது. வீடியோ பதிவு செய்வது, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், பக்தர்களின் வழிபாட்டு அனுபவமும் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையிலும், திருக்கோயில்களின் பாரம்பரியத்தையும், புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ.5 கட்டணம் வசூல்

செல்போன்களை எடுத்து செல்ல முடியாத பக்தர்களின் வசதிக்காக, சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் மற்றும் பாதுகாப்பு லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு தரிசனம் முடிந்த பின்னர் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்பாதுகாப்பு கவுண்டர்களை செயல்படுத்துவதற்காக தனி ஊழியர்கள், பாதுகாப்பு லாக்கர்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்டும் வகையில், செல்போன் ஒன்றுக்கு ரூ.5 என்ற குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணமும் திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்டதல்ல, செல்போன்களை பாதுகாப்பாகப் பெற்றுக்கொண்டு, முறையாக பராமரித்து, பக்தர்களுக்கு மீண்டும் வழங்குவதற்கான ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக மட்டுமே இந்த குறைந்தபட்சக் கட்டணம் பெறப்படுகிறது.

போதுமான அளவில் செல்போன் கவுண்டர்கள்

செல்போன் தடை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சில திருக்கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்களில் பக்தர்கள் அதிகளவில் வரிசையில் நிற்பதால், கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது அந்தந்த திருக்கோயில்களின் தேவைக்கேற்ப போதுமான அளவில் செல்போன் கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இடங்களில், தேவைக்கேற்ப கூடுதல் கவுண்டர்களை அமைப்பது குறித்து அந்தந்த திருக்கோயில் நிர்வாகம் முடிவெடுத்து செயல்படுத்துவதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்தக் காத்திருப்பு நேரத்தை பெருமளவில் தவிர்க்க முடியும். கோயிலுக்கு அருகில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளிலேயே செல்போன்களை வைத்துவிட்டும். வெளியூரிலிருந்து வருபவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் செல்போன்களை வைத்துவிட்டு, நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்களது வாகனங்களில் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு திருக்கோயிலுக்குள் செல்லலாம்.

சாதாரண கைபேசிகளுக்கு தடை இல்லை

புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகள் திருக்கோயிலுக்குள் எடுத்துவர எந்தவித தடையும் இல்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட திருக்கோயில் நிர்வாகத்திற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவசரக்கால தேவைகளின்போது பக்தர்களுக்கு உதவுவதற்காக திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒன்றிணைந்து செயல்படுவோம்

திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்கள் அனைத்தும் பக்தர்களின் ஆன்மிக அனுபவத்தை மேம்படுத்தவும், அமைதியான வழிபாட்டுச் சூழலை உருவாக்கவும், நமது திருக்கோயில்களின் பாரம்பரியம், புனிதத்தன்மை மற்றும் ஆன்மிகச் சிறப்பை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசும், பொதுமக்களும் இணைந்துதான் இதுபோன்ற நல்ல மாற்றங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

எனவே, திருக்கோயில்களில் பக்தர்களின் அமைதியான வழிபாட்டிற்கும், கோயில்களின் பாரம்பரியத்தையும், புனிதத்தன்மையையும் பாதுகாப்பதற்கும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது திருக்கோயில்கள் அமைதியின் மையமாகவும், ஆன்மிகத்தின் அடையாளமாகவும், நமது பாரம்பரியத்தின் பாதுகாப்பிடமாகவும் திகழ அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com