ஓடும் பஸ்சில் முதியவரிடம் ரூ.5 லட்சம் நகை-பணம் அபேஸ்

கடலூரில் ஓடும் பஸ்சில் முதியவரிடம் ரூ.5 லட்சம் நகை-பணத்தை அபேஸ் செய்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் முதியவரிடம் ரூ.5 லட்சம் நகை-பணம் அபேஸ்
Published on

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அருகே உள்ள ஏ.குறவன்குப்பத்தை சேர்ந்தவர் சுப்பராயலு (வயது 60). இவர் புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை நெய்வேலியில் இருந்து கடலூர் வந்தார். பின்னர் கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு பஸ்சில் குடும்பத்துடன் ஏறினார். அப்போது அவர் தனது கைப்பையை பஸ்சில் இருக்கைகளுக்கு மேற்பகுதியில் பொருட்கள் வைக்கக்கூடிய இடத்தில் வைத்திருந்தார்.

பின்னர் அந்த பஸ் கடலூர் அண்ணாபாலம் அருகில் சென்றதும் சுப்பராயலு தனது கைப்பையை பார்த்த போது, அது காணவில்லை. இதனால் பதறிய அவர் கூச்சலிட்டார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் அவர் சக பயணிகள் உதவியுடன் பஸ் முழுவதும் கைப்பையை தேடி பார்த்தார். இருப்பினும் கிடைக்கவில்லை. அந்த பையில் 14 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக தெரிகிறது. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

இதையடுத்து சுப்பராயலு தனது குடும்பத்துடன் பஸ்சில் இருந்து இறங்கி, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து பஸ் நிலையம் மற்றும் அண்ணாபாலம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் முதியவரிடம் நகை-பணத்தை அபேஸ் செய்து சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com