

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹாலிக் அலாவுதீன் (வயது 32). இவர் சென்னையில் வசித்து வருகிறார். ராமநாதபுரம் அருகே குயவன்குடி கிராமத்தில் உள்ள ஒரு நிலத்தை தனது தாயார் பெயரில் பதிவு செய்ய வெளிப்பட்டினம் சார்பதிவாளர் ராமநாதனை அணுகி உள்ளார். அப்போது பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் ராமநாதன், ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாலிக் அலாவுதீன் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.3 லட்சத்தை சார்பதிவாளரின் வங்கி கணக்கிலும், ரூ.17 லட்சத்தை சார்பதிவாளருக்கு நெருக்கமான அயூப்கான் என்பவரிடமும் வழங்கியுள்ளார். இதையடுத்து கடந்த 18-ந்தேதி அன்று மீண்டும் பத்திரப்பதிவு சம்பந்தமாக சார்பதிவாளரை சந்தித்த போது, மேலும் ரூ.25 லட்சம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யமுடியும் என சார்பதிவாளர் கூறியதாக கூறப்படுகிறது.
பின்னர் மீண்டும் பேசி ரூ.10 லட்சம் குறைத்து ரூ.15 லட்சம் கேட்டதுடன், அதில் ரூ.3 லட்சம் ரொக்கமாக அயூப்கானிடமும், ரூ.12 லட்சத்தை குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கிலும் செலுத்துமாறு கூறியுள்ளார். மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹாலிக் அலாவுதீன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ஹாலிக் அலாவுதீன் ரசாயன பவுடர் தடவிய ரூ.3 லட்சத்தை நேற்று வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அயூப்கானிடம் கொடுத்தார்.
அதனை அவர் வாங்கிய போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அயூப்கான் (53) மற்றும் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் ராமநாதனை (59) கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.