

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகள் எதிர்கொண்டு வரும் சமூக, பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு, கடந்த 2021 மே மாதத்தில் இருந்து விடியல் பயணம் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் நகரப் பேருந்துகளில் உழைக்கும் பெண்கள் தினசரி 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து, சராசரியாக மாதம் ரூ.1,000 பயனடைந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2023 செப்டம்பர் 15-ம்தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எதிர் நோக்கியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளால் மகளிர் உதவித் தொகை செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்பட்டு, அதனால் குடும்பத் தலைவிகள் சிரமங்களை சந்திக்கக் கூடாது என்ற பொறுப்புணர்வோடும், கோடைக் காலத்தில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை நாட்கள் என்பதாலும், குடும்பச் செலவுகள் கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு சிறப்பு நிதியாக ரூ.2,000 சேர்த்து, குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் வங்கியில் முன் கூட்டியே செலுத்தி விட்டு, அந்த இனிய தகவலை காணொளி வழியாக அறிவித்திருப்பது அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்-அமைச்சரின் சமூக நீதி பார்வையும், பாலின சமத்துவம் நோக்கிய நடவடிக்கைகளையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்வுடன் வரவேற்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.