

நாகை,
திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
போதைப் பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் பேணவும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து சார்பில் மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில், பொதுமக்கள் கவனத்திற்கு... நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நீரூபிக்கப்பட்டால் ரூ.5,000/- அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5,000/-அபராதம் வசூலிக்கப்படும். “இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”.
இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்... ‘மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், விழுந்தமாவடி ஊர் மக்களின் இத்தகைய முடிவு மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.